• டாஸ்மாக் மதுக்கடைகளை மூடச் சொல்லி போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா? - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கண்டனம்

    மதுரவாயல் – நொளம்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என போராடிய பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

    கொலை – கொள்ளை – கற்பழிப்பு – கடத்தல் – கலாச்சார சீரழிவு போன்வற்றிற்கு மூலகாரணமாக விளங்கும் மதுக்கடைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்களும் – சமூக ஆர்வலர்களும் நீண்ட காலமாக போராடி வருவதோடு இந்திய ஜனநாயக கட்சியும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர் போராட்டங்களையும் - உண்ணாவிரத ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

    அ.தி.மு.க-வும் -  தி.மு.க.வும் போட்டி போட்டுக்கொண்டு மதுக்கடைகளை திறந்தும் - மது உற்பத்தி ஆலைகளை நிறுவியும் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் வயது வித்தியாசமின்றி மதுவுக்கு அடிமையாக வழிவகுத்துவிட்டு,தேர்தல் நேரத்தில் மக்களை திசைதிருப்பும் நோக்கில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கட்டாய சட்டம் இயற்றுவோம் என்பது வெறும் வெற்று வாக்குறுதியாகும்.

     

    இன்று (05.05.2016) மதுவராயல் நொளம்பூர் பகுதியில் சர்ச்சைக்குரிய மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.  இதன்காரணமாக பூந்தமல்லி சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைசெய்ததுள்ளனர். படிப்படியாக மதுவிலக்கைஅமல்படுத்துவோம் என கூறிக்கொள்வோரால் ஒரு மதுக்கடையை கூட மூடமுடியாது ஏன்?

    உயிரிழப்பிற்கும் -  சமூக சீரழிவிற்கும் காரணமாக உள்ள மதுக்கடையை மூடு என போராடும் பொதுமக்கள் குற்றவாளி என்றால்  மதுக்கடைகைளை தாராளமாக தமிழகம் முழுவதும் திறந்துவைத்தவர்கள் என்ன தியாகிகளா...?

    எனவே, மதுரவாயல் சம்பவம் ஏற்படுத்தியுள்ள பதட்டத்தை தணிக்கும் வகையில், மதுரவாயல் – நொளம்பூர் பகுதியில் அமைந்துள்ள அந்த குறிப்பிட்ட மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.