• நடுத்தர மக்களின் மீது அதிக சுமையை ஏற்றாத நிதிநிலை அறிக்கை - பட்ஜெட் குறித்து டாக்டர் பாரிவேந்தர் கருத்து

    2016-17-ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை, தமிழ்நாடு நிதியமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

    அதில், பல லட்சம் இளைஞர்கள் தங்களின் உயர்கல்வியை முடித்த பின்னரும் அவர்களுக்கு உலகலாவிய அறிவும் – போட்டி தேர்வை எதிர்கொள்ளும் திறனும் இல்லாததால் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இதனை போக்க வரும் ஆண்டுகளில் ஏறக்குறைய 2-லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு – பல லட்ச இளைஞர்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நீண்டநாள் கோரிக்கையான “லோக் ஆயுக்தா சட்டம்” கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கதக்கதாகும்.

    வைகை மற்றும் நொய்யலாற்றினை தூர்வாரியது போல், பிற ஆறுகளையும் தூர்வார முதற்கட்டமாக ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கியுள்ளதையும், ஒவ்வொரு நாளும் பெருகிவரும் சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் “சாலை பாதுகாப்புக்காக” ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதையும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடுகள் இல்லாத நடுத்தர மக்களுக்காக, பத்து லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பினையும் வரவேற்கின்றேன். 

    மேலும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சியாளர்கள் கூறியதைப்போல் சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்பதையும், சம்பா சாகுபடி பாதிக்காத வண்ணம் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தடையில்லாமல் கிடைக்கும் நோக்கில் கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதலாக ரூ. 150 கோடியை ஒதுக்கியுள்ளதையும், மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.ஐந்தாயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பினையும் இந்திய ஜனநாயக கட்சி வரவேற்கின்றது.

    வனவிலங்குகளால் அதிகளவில் இழப்பை சந்திக்கும்  மலைவாழ் மக்களின் இழப்பீட்டு தொகையை “தேசிய பேரிடர் இழப்பீட்டு தொகைக்கு இணையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் – மழைகாலங்களில் அதிக இழப்பை சந்திக்கும் கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய “வெள்ளத்தடுப்பு” நடவடிக்கை  எடுக்கப்படும்  என்பதும் புதிய திட்டங்களாகும். இவை நடைமுறைப்படுத்தப்பட்டால், மலையோர மக்களும் – கடலோர மக்களும் பாதுகாப்புடன் வாழும் சூழ்நிலை ஏற்படும்.

    மொத்தத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016-17ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையானது, நடுத்தர மக்களின் மீது ‘வரி’ எனும் சுமையை ஏற்றாமல் பயணிக்கின்றது என்கிற அளவில் இதனை வரவேற்கின்றேன்.