• பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருதைப் பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    நடிகர் – இயக்குநர் – திரைக்கதை ஆசிரியர் – தயாரிப்பாளர் – பின்னணி பாடகர் – பாடலாசிரியர் போன்ற பன்முகம் கொண்ட கலைஞர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான “செவாலியே” விருது அறிவிக்கப்பட்டுள்ளது உலகளவில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

    தனது பன்முக திறமையால் தமிழ் திரைவுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் – சர்வதேச திரைப்பட தரத்தில் தமிழ்சினிமாவை கொண்டுசென்றதில் கமல்ஹாசனுக்கு முக்கிய பங்குண்டு.

    1997-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போதே இந்த விருதின் மதிப்பு உலகரங்கில் உயர்ந்தது. தற்போது இந்த விருதினை கமல்ஹாசன் பெருவதின்மூலம் தமிழ்சினிமாவின் மதிப்பு உலகரங்கில் உயர்ந்துள்ளது.

    1960-ம் ஆண்டு வெளிவந்த “களத்தூர் கண்ணம்மா” திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் – இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ள கமல்ஹாசானுக்கு மத்திய மாநில அரசின் பல்வேறு விருதுகள் கிடைத்திருந்தாலும் தற்போது பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது கமல்ஹாசனின் திரைவுலக சாதனைகளுக்கு மேலும் ஒரு மகுடமாகும்.

    தன்னுடைய கடின உழைப்பால் – கலைத்துறையில் சாதித்து செவாலியே விருது பெறப்போவதின் மூலம் தமிழ் திரைவுலகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய திரைப்பட உலகத்திற்குமே பெருமை சேர்த்திருக்கும் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.