• சிறுவாணியை தொடர்ந்து பாலாறு மற்றும் மேகதாது – ராசிமணலில் அணைகள் கட்ட முயற்சிக்கும் ஆந்திர – கர்நாடக மாநிலங்களுக்கும் தடைவிதிக்கவேண்டும் - மத்திய அரசிற்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    உலகின் மிகவும் சுவையான நீருக்கு புகழ்பெற்ற சிறுவாணி ஆறானது கோவை – ஈரோடு – திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன் – பல லட்சம் ஏக்கர்  விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆற்றின் குறுக்கே 4.5 டி.எம்.சி தண்ணீரை தேக்க அட்டப்பாடி எனும் இடத்தில் புதிய தடுப்பணையை கட்டுவதற்காக கடந்த 2012 – ம் ஆண்டு கேரள அரசு முடிவெடுத்தது.

    முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழக  அரசின் இடைவிடாத சட்ட போராட்டம் மற்றும் சட்டமன்ற தீர்மானங்களின் மூலம் மத்திய அரசிற்கு தொடர்ந்து கொடுத்துவந்த  அழுத்தத்தின் காரணமாக தற்போது மத்திய அரசு, சிறுவாணியின் குறுக்கே அணைகட்ட கேரள அரசிற்கு தடை விதித்துள்ளதை இந்திய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கின்றது.

    அதேவேளையில், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக 39 கி.மீ கடந்து, தமிழகத்தில் 222 கி.மீ பாய்ந்தோடும் பாலாற்றின் குறுக்கே வேலூர் மாவட்டத்திலுள்ள குப்பம் அருகில், கணேசபுரத்தில் சுமார் 65 கோடி திட்ட மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

    ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே போதிய இடைவெளியில் சிறிதும் – பெரிதுமாக ஆந்திர அரசு ஏறக்குறைய 20 தடுப்பணைகளை கட்டியுள்ள சூழலில், கணேசபுரத்திலும் தடுப்பணை கட்டப்பட்டால்,  தமிழகத்தின் வேலூர் – காஞ்சிபுரம் – திருவண்ணாமலை – திருவள்ளூர் – சென்னை ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படுவதுடன், ஏறக்குறைய 4.20 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறாமல் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கர்நாடக அரசு, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கும் – உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கும் துளியளவு கூட மதிப்பு தராமலும், தமிழகத்திற்கு காவிரியிலிருந்து கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை தராமலும், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்தும், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் நோக்குடனும் செயல்பட்டு வருகின்றது.

    இதன் உச்சகட்டமாக காவிரியின் குறுக்கே மேகதாது – ராசிமணல் ஆகிய இரு இடங்களில் அணைகள்  கட்ட கர்நாடக அரசு முதற்கட்டமாக ரூ.5,192 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.

    இயற்கையாக உற்பத்தியாகி யாருக்கும் பயனளிக்காமல் கடலில் கலக்கும் நதி நீரில், தமிழகத்தின் உரிய பங்கீட்டில் ஆந்திரா – கேரளா – கர்நாடக மாநிலங்கள் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன.

    நதிகள் என்பது வேளாண்மையின் இரத்த நாளங்கள் போன்றதாகும். இதயத்திலிருந்து உடம்பின் பிற பகுதிகளுக்கு ரத்தம் செல்வதால் – இதயமே இரத்தம் முழுமைக்கும் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்…? நீராதாரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையானதுடன்,  அவரவர் விகிதாச்சாரப்படி நீர்வளத்தை பங்கிட்டுக் கொள்ளவேண்டும்.

    மத்திய அரசின் நேரடி வழிகாட்டுதல் இல்லாமல், நதிநீர் சிக்கல்களை அந்தந்த மாநில அரசுகள் தங்கள் கைகளில் எடுப்பதும், தீர்மானிப்பதும் மிகப்பெரிய பின்விளைவுகளையும் – வாழ்வாதார பிரச்சனைகளையும் மாநிலங்களுக்கிடையே ஏற்பட வழிவகுக்கின்றது.

    தொடர்ந்து நடைபெற்று வரும் நதிநீர் பங்கீட்டு பிரச்சனைகள் மாநிலங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்துவதுடன், நம் நாட்டின் ஒருமைப்பாட்டையும் – இறையாண்மையையும் சீர்குலைத்து வருகின்றது.

    எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வுகாண, மத்திய அரசு உரிய காலத்தில் நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைப்பதுடன், கேரள அரசின் சிறுவாணி அணைகட்டும் விவகாரத் தடையைப் போன்றே, பாலாறு மற்றும் மேகதாது – ராசிமணலில் அணைகள் கட்ட முயற்சிக்கும் ஆந்திர – கர்நாடக மாநிலங்களுக்கும் தடைவிதிக்க வேண்டுமென மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.