• மீத்தேன் – ஷெல் எரிவாயு திட்ட ரத்து அறிவிப்பு காவிரி படுகை விவசாயிகளுக்கு இனிப்பான செய்தியாகும் - டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு

    கடந்த 2010-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசானது தமிழகத்திலுள்ள திருச்சி – தஞ்சை – திருவாரூர் – நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹரியானாவைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜி நிறுவனத்திற்கு, மீத்தேன் எடுக்க 35 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியது.

    அதேபோல், கடந்த 2013-ம் ஆண்டு இந்திய இயற்கை எரிவாயு நிறுவனத்திற்கு இதே டெல்டா மாவட்ட பகுதிகளில் மீத்தேனை விட கொடிய, ‘படிமப்பாறை எரிவாயு‘ எனப்படும் ஷெல் எரிவாயுவை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரங்களும் – விவசாய நிலங்களும் முற்றிலுமாக பாதிக்கப்படும்.  மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் குறைவு, கடல் நீர் உட்புகுதல் போன்றவை ஏற்பட்டு டெல்டா மாவட்டம் முழுவதும் பாலைவனமாகும் அபாயம் ஏற்படும் என்பதை உணர்ந்து, இந்திய ஜனநாயக கட்சி உட்பட பல்வேறு விவசாய சங்கங்களும் – அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடி வந்தன.

    பல ஆண்டுகளாக நடைபெற்ற இப்போராட்டத்தின் வீரியத்தையும் – மக்களின் எண்ண ஓட்டத்தையும் கருத்தில்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, மீத்தேன் மற்றும் ஷெல் எரிவாயு திட்டத்தை ரத்து செய்துள்ளது. மீத்தேன் ஷெல் எரிவாயு திட்ட ரத்து அறிவிப்பு என்பது காவிரி படுகை விவசாயிகளுக்கு இனிப்பான செய்தியாகும்.

    இந்த அறிவிப்பினை வரவேற்பதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் எந்த வடிவிலும் மீண்டும் அமல்படுத்தப்படக் கூடாது என்பதனையும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.