• உலகம் ஒரு மாபெரும் இரும்பு மனிதரை இழந்துவிட்டது. ஃபிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    கம்யூனிஸ்ட் புரட்சியவாதியும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90-வது வயதில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.

    1959-முதல் 1976-வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை கியூபாவின் அதிபராகவும் ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கும் மேல் ஒரு சிற்பியைப்போல் கீயூபா நாட்டை வடிவமைத்த பெருமை மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவையே சாரும்.

    அமெரிக்கா விதித்த பொருளாதார தடை உள்ளிட்ட அனைத்து தடைகளையும் அடித்து நொறுக்கி, கீயூபாவை கல்வி – மருத்துவம் – விவசாயம் ஆகியவற்றில் வளர்ச்சியடைய செய்து, தனது நாட்டை பொருளாதார உச்சநிலைக்கு கொண்டுவந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள். 

    ஃபிடல் காஸ்டே்ரோவின் ஆட்சிகாலத்தில் தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடமையாக்கி, கியூபாவின் வளங்கள் அனைத்தும் – கீயூபா மக்களுக்கே என்று ஆணை பிறப்பித்ததுடன் நாடு முழுவதும் இலவச கல்வியை அறிமுகம் செய்ததின் விளைவாக இன்று அந்நாட்டில் தொழி்ற்துறையில் 60 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனர். யூனிஸ்கோ வெளியிட்ட அறிக்கையின்படி உலகிலேயே 96 சதவீத மக்கள் எழுத்தறிவு கொண்ட நாடாகவும் கியூபா விளங்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தன்மீது தொடுக்கப்பட்ட பலநூறு கொலை முயற்சிகளை வெற்றி கொண்ட அம்மாபெரும் மனிதரால் இயற்கை தொடுத்த மரணப்போரில் வெல்லமுடியவில்லை. அதனால் உலகம் மாபெரும் ஒரு இரும்பு மனிதரை இழந்து - வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. அவரை இழந்து வாடும் கியூபா நாட்டு மக்களுக்கும், இங்குள்ள அவரின் ஆதரவாளர்களுக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.