• மேகதாது அணை திட்டத்திற்கு ரூ.5900 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது - IJK தலைவர் ரவிபச்சமுத்து கோரிக்கை

    காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட கர்நாடக அரசு, தமிழகத்திற்கு சேரவேண்டிய காவிரி நீரை முறையாக வழங்குவதில்லை. இதனால் தமிழக விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி, விவசாயம் என்பதே கேள்விக்குறியாவிட்டது. இந்நிலையில், நேற்று (15.02.2017) பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் மேகதாது, அணைகட்ட 5912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க காவிரி நடுவர்மன்ற உத்தரவை மீறும் செயலாகும். காவிரி ஆற்றில் கர்நாடகம் நீர்தேக்க அணை கட்டினாலோ அல்லது தடுப்பணைகள் கட்டினாலோ தமிழகத்தின் அனுமதியை பெறவேண்டும் என விதி உள்ளது. ஏற்கனவே எந்த சட்ட நடைமுறைகளையும் மதிக்காத கர்நாடக அரசு, தற்போது மேகதாது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    ராமநாத மாவட்டம் கனகபுரா பகுதியில் காவிரியை மறித்து அணைகட்டுவதன்மூலம் சுமார் 66 TMC தண்ணீர் தேக்கிவைக்கப்படும் என கூறப்படுகிறது. கனகபுரா அருகே உள்ள மேகேதாட் வழியாக வரும் காவிரி ஆற்றை மறித்து அணை கட்டினால், அது தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரின் அளவை பாதிக்கும்.  ஏனெனில் இந்த அணையே, பெங்களூர், மைசூர் மற்றும் மாண்டியா மாவட்ட மக்களின் குடிநீருக்காகவும் – மின்உற்பத்திக்காகவும் என கூறித்தான் கர்கநாடகம் அணைகட்டுகிறது. குடிநீர் பற்றாக்குறை என காரணம் காட்டி தண்ணீர் திறந்துவிட மறுப்பதற்கு இதுவே வலுவான காரணமாக அமைந்துவிடும்.

    இந்த அணை கட்டுவதற்கான நிதியினை கர்நாடக அரசு ஒதுக்கிவிட்டாலும், இதற்கான ஒப்புதலை மத்திய நீர்பாசனத்துறையும் – சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் வழங்கவேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.