• புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும் - மத்திய அரசிற்கு ரவிபச்சமுத்து கோரிக்கை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிலுள்ள நெடுவாசல் மற்றும் வடகாடு ஆகிய பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்ற செய்தி விவசாயிகளிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. துபாயை தலைமையிடமாகக் கொண்டுள்ள ‘ஜெம்’ நிறுவனம், அடுத்த 15 ஆண்டுகளில் இப்பகுதியில் 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க  இம்மாதம் 15ம் தேதி மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

    ஏற்கனவே, டெல்டா மாவட்டங்களில் கைவிடப்பட்ட மீத்தேன் மற்றும் ஹெல் எரிவாயு திட்டத்தின் மறுவடிவம் தான் இது. கடந்தாண்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) இதே பகுதியில் சுமார் 5 ஆயிரம் அடி ஆழ்துளையிட்டு எரிவாயு சோதனை நடத்திய போதே, மக்களின் கடும் எதிர்ப்பால் அச்சோதனை அப்போது கைவிடப்பட்டது. 

    இத்திட்டத்திற்காக விவசாய நிலங்களில் 1000 முதல் 5000 மீட்டர் ஆழத்தில் துளையிடப்பட்டு நிலத்தடி நீரியினை வெளியேற்றுவதால் விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் விஞ்ஞான முறைப்படி ஹைட்ரோ கார்பனை பிரித்தெடுக்கும் முறையை கையாளும் போது, இயற்கை வளம் முற்றிலுமாக பாதிக்கப்படும்.

    விவசாயத்தை அழித்து – தமிழகத்தை நாசப்படுத்தும் எந்த திட்டதையும்,எத்தகைய வடிவில் நடைமுறைப்படுத்த முயற்சித்தாலும் அதற்கு கடுமையான எதிர்விளைவுகள் உண்டாகும் என்பதனை கவனத்தில் கொண்டு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.