• டெல்லி பல்கலைகழகத்தில் உயிர் இழந்த தமிழக மாணவரின் மரணம் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். -IJK தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் மேற்படிப்பு படித்து வந்த சேலம் மாநகரைச் சேர்ந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.

    கடந்த ஆண்டு ஜுலை மாதம் 10-ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த திருப்பூர் மாணவர் சரவணன், கல்லூரியில் சேர்ந்த பத்து நாட்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதன் சூடு குறையும் முன்பாகவே, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மரணம் மீண்டும் பல கேள்விகைள ஏற்படுத்தியுள்ளது.

    இவர், ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வேமுலாவுடன் தொடர்பில் இருந்தவர் என கூறப்படுகிறது. அங்கிருந்து டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் மேற்படிப்பிற்காக கடந்த ஆண்டு சேர்ந்து படித்து வந்த நிலையில் இப்படி ஒரு தூயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    டெல்லி காவல்துறை அதிகாரிகள் இது தற்கொலைதான் என கூறுகின்றார்கள். மேலும், மாணவர் முத்துகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை எடுத்துவிட்டார் எனவும் கூறுகின்றார்கள். ஆனால், மாணவர் முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தினர், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், இந்த மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்கிறார்கள். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் டெல்லியில் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இதன் உண்மைத்தன்மையை வெளிக்கொணர முறையான புலன் விசாரனை தேவை. எனவே தமிழக அரசு இது குறித்து மத்திய அரசிடம் கோரி முறையான விசாரனைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.