• ஜெனீவாவில் வைகோ மீது தாக்குதல் முயற்சி - IJK நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் கண்டனம்

    ஜெனீவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் முதன்மை அரங்கில், கடந்த 25-ம் தேதி சிறப்பு அமர்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு.வைகோ அவர்கள் கலந்துகொண்டு, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும் - தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும், ஆதாரத்துடன் உரையாற்றினார். குறிப்பாக தமிழ்ஈழம் என்கிற தனி நாடு உருவாவது குறித்து உலகளாவிய கருத்துக்கணிப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

     இதற்கு வலுசேர்க்கும் வகையில், 2013 மார்ச் மாதம் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்தும் எடுத்துரைத்தார். அவருடைய இப்பேச்சிற்கு ஐ.நா மனித உரிமைகள் சபையில் பெருமளவு ஆதரவு ஏற்பட்டதை சகித்துக்கொள்ள முடியாத சில சிங்களர்கள், வைகோவின் மீது தாக்குதல் நடுத்துகின்ற அளவிற்கு அவரை வழிமறித்துள்ளனர்.

     ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் ஜனநாயக ரீதியில் தங்களின் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு முழு சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அப்படியான ஒரு நிலை இருந்தால்தான் தங்கள் கருத்துக்களை வலிமையுடன் நிறுவமுடியும். ஆனால், வைகோவை வழிமறித்து சிங்களர்கள் தாக்க முயன்ற சம்பவம் உலக அரஙகில் தமிழர்களின் குரல் ஒலிக்கக்கூடாது என்கிற அவர்களின் குறுகிய இனவாத அரசியலையே வெளிப்படுத்துகின்றது. இப்போக்கினை உலகநாடுகளின் பிரதிநிதிகள் கண்டிக்கவேண்டும்.

    வருங்காலத்தில் இதுபோன்றதொரு அசாதாரணமான சூழ்நிலை எந்த ஒரு பிரதிநிதிக்கும் ஏற்படாத வகையில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு அளிக்கவேண்டும். மேலும் வைகோவை தாக்க முயன்றவர்கள் மீது சர்வதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முறையான விசாரனை நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.