• பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான அவசர சட்டம் பெண் சமுதாயத்திற்கு மிகப்பெரும் பாதுகாப்பாகும் - - பிரதமர் மோடிக்கு டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு –

    டந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்கிற மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரணமடைந்தது முதல், கடந்த சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 6 வயது, 9 வயது சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் வரை நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள், சட்டத்தின் பலவீனங்களை பயன்படுத்திக்கொண்டு, பிணையிலேயோ அல்லது வழக்கிலிருந்தோ முற்றிலும் விடுதலை பெற்று, வெளியே வந்துவிடுகிறார்கள். இதனை தடுக்கும் வகையில், ஏற்கனவே உள்ள சட்டங்களை திருத்தி, மிகவும் கடுமையான வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

    அதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு இந்திய குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், ‘போக்சோ சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றது. பின்னர் இச்சட்ட வரைவிற்கு நேற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதனால் இச்சட்ட விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

    இந்த அவசர சட்டத்தின்படி 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், அதிகபட்சமாக மரணதண்டனை வரை கொடுக்கலாம் என்பதை வரவேற்கின்றோம். மேலும் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கும் காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும். மேல்முறையீடு செய்தால் 6 மாதங்களுக்குள் முடித்துவைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    ஆக, சட்டத்தின் பிடி மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் முடிவுற்கு வரும் என எதிர்பார்க்கின்றோம். இச்சட்டத்தினை தகுந்த நேரத்தில் கொண்டுவந்து, பெண் சமுதாயத்திற்கு மிகப்பெரும் சட்ட பாதுகாப்பினை வழங்கிய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும் – நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.