• கஜா புயல் பாதித்த பகுதிகளில் ரூபாய் 60 லட்சம் அளவிற்கான நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்படும் ஐஜேகே நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாய் விளங்கும் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர்உட்பட பல மாவட்டங்களில் கஜா புயலின் கோரத்தாண்டவம் ஆடி அடங்கி இருக்கிறது. எனினும் அதன் பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டுவர பல காலம் ஆகும்.தற்போது மின்சாரம், குடிநீர், சாலைவசதி இல்லாமல் பல லட்சம் மக்கள் வாடி தவிக்கின்றார்கள். பல ஆயிரம் வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி விட்ட நிலையில், சாலைகளிலும் நிவாரண முகாம்களிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்திற்கே சோறு போடும் தஞ்சை தரணியும், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களும் நிவாரண உதவிகளுக்காக ஏங்கிக்கிடக்கும் காட்சிகள் நெஞ்சைஉருக்குவதாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில - மாவட்ட பொறுப்பாளர்கள், புயல் பாதித்த இடங்களில் நேரடியாக சென்று நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட  தண்ணீர் லாரிகள் மூலம், குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு 15 ஜெனரேட்டர்கள் அனுப்பப்பட்டு, ஆங்காங்கே உள்ள குடிநீர் மேலேற்று மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் தொட்டிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

    மேலும் 5 கிலோ அரிசி கொண்ட பத்தாயிரம் பாக்கெட்டுகளும், 10,000 மெழுகுவத்திகள் -நாப்கின்கள் - போர்வைகள் - வேட்டி, சேலை, துண்டுகள்-குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள்,பிஸ்கட்டுகள் மற்றும் உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு, தேவைப்படும் பட்சத்தில் மேலும் உதவிப் பொருட்கள் வழங்கப்படும். 

    இந்த இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் மனத்துணிவை மக்கள் பெற்று- இன்னல்கள்,இடையூறுகளிலிருந்து அவர்கள் மீண்டெழ வேண்டும் எனக்கூறி, அதற்காக இந்திய ஜனநாயக கட்சிஅனைத்து உதவிகளையும் செய்ய சித்தமாய் இருக்கின்றது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.