• தமிழக அரசு நிதிநிலை அறிக்கை குறித்து டாக்டர் பாரிவேந்தர் அறிக்கை

    தமிழக அரசின் 2019 – 20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை இன்று(08.02.2019)  சட்டப்பேரவையில் நிதியமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்ற சூழ்நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை என்பதால், புதிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் மக்களிடையே இருந்தது. புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை என்றாலும், மாநில தொழில் வளர்ச்சிக்காகவும், விவசாய பொருட்களின் உற்பத்திக்காகவும் சிறு-குறு தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழக அரசின் கடன் தொகை உயர்ந்துள்ளது. இந்நிதியாண்டில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கு கூடுதலாக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதனையும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசின் கடனிற்காக செலுத்தவேண்டிய வட்டித்தொகை  -அரசு ஊழியர்களுக்கான சம்பளம் – ஓய்வூதியம் – மானியம்  உள்ளிட்ட பல்வேறு நிதிச்செலவினங்களைத் தாண்டி நீண்டகாலத் திட்டங்களுக்காகவும் –வளர்ச்சிப்பணிகளுக்காகவும் நிதி ஒதுக்கவேண்டிய சூழ்நிலையில் மாநில அரசு உள்ளது.

    நிதியமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல GSTநிலுவைத்தொகையும் – உள்ளாட்சி நிதி ஒதுக்கீடும் - மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய பங்கீட்டுத்தொகையும் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. மாநில அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி இத்தொகையினை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

    கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து  757 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி கடந்த ஆண்டைக்காட்டிலும் 1200 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இக்கல்வி ஆண்டில் 29 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் எனவும், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலைக்கல்லூரி தொடங்கப்படும் எனவும், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கல்விக்கட்டணத்தை திரும்பச் செலுத்த 460 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,தொழில் வளர்ச்சிக்காக 2747 கோடி ரூபாயும், சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு2681 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீனம்பாக்கத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது சென்னையின் போக்குவரத்து நெரிசலை ஓரளவிற்கு குறைக்க உதவும்.

    இரண்டாயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும் எனவும், சென்னை –மதுரை- கோவை ஆகிய மாநகரங்களில் முதற்கட்டமாக 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.  மாற்றுத்திறனாளிகள் –திருநங்கைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான அடிப்படைத் தேவைகளை ஓரளவு பூர்த்திசெய்யும் என கருதலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறைக்கு 1297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை தொடர்ந்து நலிவடைந்தும் – நட்டமடைந்தும் வரும் நிலைமையை மாற்றி,லாபகரமான சூழலுக்கு கொண்டுசென்றால் மட்டுமே இந்தளவிற்கான மானியத்தொகையினை கட்டுப்படுத்தமுடியும்.

    சமீபத்தில் தஞ்சை – திருவாரூர் – நாகை – புதுக்கோட்டை ஆகிய மாவட்ட மக்களுக்கு சொல்லொனா துயரத்தினை ஏற்படுத்திய கஜா புயலுக்கான நிவாரண நிதியாக 2361 கோடியினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய அரசிடம் மேலும் கூடுதலாக நிதி உதவியினைப் பெற்று, வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் அம்மக்களுக்கு தமிழக அரசு உதவிகரமாக இருக்கவேண்டும். மொத்தத்தில் கடுமையான நிதி நெருக்கடியிலும் சாதாரண – சாமானிய மக்களின் மீது வரிச்சுமையினை ஏற்றி, அவர்களை பாதிப்பிற்குள்ளாக்காமல்,  இருப்பதைக்கொண்டு சிறப்புடன் போடப்பட்டுள்ள இந்நிதிநிலை அறிக்கையினை வரவேற்கின்றோம்.