• உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் விழாவே ‘பொங்கல் விழா’ டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் பொங்கல் விழா வாழ்த்துச் செய்தி

    உழைத்துப் பயன் விளைக்கும் உழவர் சமுதாயம் அறுவடை செய்த நெல்லை சமைத்து உண்பதற்கு முன், உடன் உழைத்தவர்க்குப் பகிர்ந்து வழங்கி, விளைச்சலுக்குத் துணைபுரிந்த வான்மழைக்கும் - கதிரவனுக்கும் - கால்நடைகளுக்கும் நன்றிகூறி மகிழ்ந்து கொண்டாடும் பொன்னாள் ‘பொங்கல் திருநாள்’.

    தமிழர்களின் வீரம் – நாகரீகம் – கலாச்சாரம் – பண்பாடு ஆகியவற்றை இவ்வுலகிற்கு எடுத்துரைப்பதுடன், ஜாதி – மதம் – இனம் – மொழி கடந்து அனைவரும் வேற்றுமை மறந்து, ஒன்றுபட்டு கொண்டாடும் திருவிழாவாக இந்த பொங்கல் விழா அமைந்துள்ளது.

    உழவுத் தொழில் புரிவோர் மற்ற தொழில் செய்பவர்களுக்கெல்லாம் உணவளித்துத் தாங்குவதால், உழவர்கள் ‘உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள்’ ஆவர். நமக்கு உணவளிக்கும் விவசாயப் பெருமக்களையும் - விவசாய நிலங்களையும்  நாம் போற்றி  பாதுகாத்து, வருங்கால தலைமுறைகளுக்கு வளமான தமிழகத்தை உருவாக்கித் தருவது நமது கடமை எனக்கூறி, உலகெங்கும் வாழும் சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.