Loading...

செய்திகள்

Aug 14, 2025
News Image

மாபெரும் ஜனநாயக சக்தியாக விளங்கும் இந்தியா உலக நாடுகளுக்கோர் முன்னுதாரணமாக திகழ்கின்றது - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் சுதந்திர தின வாழ்த்துச்செய்தி -

முடிசூடிய மன்னர்களையும், அவர்கள் தம் படைபலத்தையும் - ஆயுதங்களையும் கொண்டு எதிர்தாக்குதல் நடத்துவதே போர்முறை என அறிந்து வந்த உலகில், தம்மை அடிமைப்படுத்திய வல்லாதிக்க ஆங்கிலேய அரசை, அகிம்சை எனும் அர்ப்பணிப்பு ஆயுதம் மூலம் வீழ்த்திக்காட்டிய பெருமை நம் இந்திய தேசத்திற்கு மட்டுமே உரியது. அண்ணல் காந்தியடிகளின் தலைமையில் இந்திய தேசமே ஒன்றிணைந்து, ஆங்கில வல்லாதிக்கத்தை எதிர்த்து நின்றதன் எதிரொலி, இந்திய மக்களின் சுதந்திர போர்முறைக்கு முற்றிலும் அடிபணிந்த ஆங்கிலேய அரசு, நமக்கு பரிபூரண விடுதலையளித்தது. ‘இந்தியர்களுக்கு ஜனநாயகப் பயிற்சி போதாது. அவர்கள் நீண்ட நாள் ஜனநாயகப் பாதையில் பயணிக்க முடியாது’ என்று நம்மை பரிகசித்த உலக நாடுகளின் வெற்று விமர்சனங்களைப் பொய்யாக்கி, மக்களாட்சி மாண்புகளைக் காத்து நின்று, இன்று 78 ஆண்டுகளை நிறைவுசெய்து, 79–ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். பொருளாதாரம் – விஞ்ஞானம் – மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி, மாபெரும் ஜனநாயக சக்தியாக விளங்கும் இந்தியா, உலக நாடுகள் அனைத்திற்கும் ஓர் முன்னுதாரணமாய் திகழ்கின்றது. இச்சமயத்தில், நமது தேசத் தலைவர்கள் நமக்களித்த மக்களாட்சி எனும் மகத்தான கொடையை, சிறிதும் சேதமின்றி கட்டிக்காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு எனக்கூறி, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News