ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - சேராங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் தம்மை காதலிக்க மறுத்ததால், இன்று காலை மாணவி ஷாலினியை பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்த செய்தியறிந்து தாங்கொணா துயரமும் – வேதனையும் அடைந்தேன். இக்கொடுரச் செயலால் உயிரிழந்த அப்பாவி மாணவி ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கும், காதல் தொல்லைகளுக்கும் ஆளாகி பல நேரங்களில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டு, தற்பொழுது உயிரிழப்பும் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலைகள் அதிகளவில் நடந்தேறி வருகின்றது. சமீப காலமாகவே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலைதான் நிலவி வருகிறது. எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணமாகின்றது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொடூரச்செயல்கள் தொடராமல் இருக்க, ராமேசுவரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, இனி எவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க முன்னுதாரணமாக கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்பதோடு, ஆளும் அரசு பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். அன்புடன், ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies