• “மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் காலதாமதம் வேண்டாம்” மத்திய அரசுக்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து கோரிக்கை

    மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக மாநில அரசுகள் 15 விழுக்காடு இடங்களை வழங்குகின்றது. இவ்வாறு மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்காக வழங்கும் இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. இதனை எதிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன.

    இவ்வழக்கின் தீர்ப்பினை, சென்னை உயர்நீதி மன்றம் நேற்று (27.07.2020) வழங்கியுள்ளது. அதில், “மாநில அரசுகள் மத்திய தொகுப்பிற்காக வழங்கிய இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 50 சதவிகித இடங்களை வழங்குவதில் எந்த தடையும் இல்லை” என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. இத்தீர்ப்பின் மூலம், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இதுவரை மூடப்பட்டிருந்த சமூகநீதியின் கதவுகள் இனிமேல் திறப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

    எனவே, மத்திய அரசு வேறு ஏதேனும் தொழில்நுட்ப காரணங்களைக் காட்டி, இந்நீதி மன்றத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் செய்யாமல், உடனடியாக  சட்டம் இயற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.